அப்பாவின் மேனரிஸங்கள் பிடிக்கும்! கௌதம் கார்த்திக்
நடிகர் முத்துராமன் வீட்டின் மூன்றாம் தலைமுறை... மணிரத்னத்தின் "கடல்' படத்தின் மூலம் கவனிக்கத்தக்க அறிமுகம்... "என்னமோ ஏதோ', "வை ராஜா வை' என இரண்டு படங்களில் பிஸி..


நடிகர் முத்துராமன் வீட்டின் மூன்றாம் தலைமுறை... மணிரத்னத்தின் "கடல்' படத்தின் மூலம் கவனிக்கத்தக்க அறிமுகம்... "என்னமோ ஏதோ', "வை
ராஜா வை' என இரண்டு படங்களில் பிஸி.... கார்த்திக் மகன் என்ற ஒளி வட்டங்களைக் காட்டாமல் உதடு பிரியா புன்னகையால் உள்ளம் நிறைகிறார் கௌதம் கார்த்திக்.
சினிமா குடும்பமே என்றாலும், இப்போது இருக்கிற இந்த இடத்தை கனவு கண்டீர்களா....?
எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்ததே இல்லை. அப்பாவுக்கும் என்னை நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் கிடையாது. ஒரு நாள் கூட சினிமா பற்றி என்னிடம் அவர் பேசியதே இல்லை. சின்ன வயதிலே பெங்களூர் பக்கம்
படிக்க போய் விட்டேன். சென்னைக்கே எப்போதாவதுதான் வருவேன். மணி சார் கூட நடந்த ஒரு சந்திப்பு என்னை மாற்றி விட்டது. ""சினிமா ரிஸ்க்கான ஏரியா. நிறைய சமாளிக்கத் தெரியணும்''ன்னு அப்பா சொல்லுவார். ரிஸ்க் எடுத்து பார்க்கலாம் என்று நானும் வந்து விட்டேன். தாத்தா,
அப்பா இரண்டு பேருமே சினிமாவில் சாதனையாளர்கள். அந்த வழியில் நானும் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. இன்னும் ரொம்ப தூரம் கடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக் கொண்டே இருக்கிறேன். வழி நடத்துகிறவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது.
"என்னமோ ஏதோ' படத்தில் பிரபு சாரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு. தகப்பன் போல் பக்கத்தில் அமர்ந்து அவ்வளவு விஷயங்கள் சொல்லி கொடுத்தார்.
""நடிகனுக்கு உடம்பும், மனசும் ரொம்ப முக்கியம். மனசு சொல்லுவதை உடம்பு கேட்கிற மாதிரி வாழ வேண்டும்'' என்று அவர் சொன்ன வார்த்தை நிறைய யோசிக்க வைக்கிறது.
பெரிய பின்புலம் இல்லாமல் வருகிறவர்கள் கூட ஹிட் ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறார்கள். அவர் மகன், இவர் பேரன் என்று பார்க்கிற விஷயங்கள் தற்போதைய சூழலில் உடைந்திருக்கிறது. இந்த நிலையில் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது சிரமம்தானே...?
உண்மைதான். இப்போது சினிமாவும் மாறியிருக்கிறது. ரசிகர்களும் மாறியிருக்கிறார்கள். தாத்தா காலம் வேறு. சினிமாவுக்கும் ஹீரோக்களுக்கும்
உன்னதமான காலம் அது. எது சொன்னாலும் எடுபடும். மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு கிடையாது. அப்பா காலத்தில் அப்படி இல்லை. நிறையப் போராட வேண்டி இருந்தது. நாளுக்கு நாள் ஹீரோக்கள் வந்தாலும், நிலைத்து நின்று 100 படங்களுக்கு மேல் ஹீரோக்கள் நடித்த காலம் அது. எத்தனை பெரிய வெற்றிகள் வந்தாலும், திறமையை மட்டுமே நம்பி ஹீரோக்கள் பயணம் போனார்கள். சினிமாவை ஹீரோக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த காலமும் அதுதான். இப்போது என் காலம் எப்படி என்று சுலபமாகக் கணித்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் பலப்பரீட்சைதான். எந்த சென்டிமென்ட்டும் கிடையாது. கால காலத்துக்கும் திறமைதான் முன்னாடி நிற்கும். எல்லாவற்றையும் சரியாக எடை போட்டு வாழ வேண்டும்.
சினிமாவுக்கு புதிய ஆள் என்றாலும் ஏற்ற, இறக்கங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கிறது. அது என்னை வழி நடத்தும்.
அப்பா கார்த்திக் ரொம்பவே ஜாலியான ஆள்... எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் கார்த்திக்கிடம் போய் பேச வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்... நீங்கள் எப்படி....?
நானும் அப்படித்தான். ரொம்பவே ஜாலியான பையன். கோபம் வந்தால் கூட மூன்று நிமிடங்களுக்கு மேலே மூளைக்குள் வைத்துக் கொள்ள மாட்டேன்.
அப்பாவின் மேனரிஸங்கள் நிறைய பிடிக்கும். அது இப்போது எனக்குள்ளும் நிறைய இருக்கிறது. படப்பிடிப்பு தவிர வேறு எங்கேயும் என்னைப் பார்க்க முடியாது. நான் உண்டு. என் வேலை உண்டு. அவ்வளவுதான். எல்லோருக்கும் அவரவர்களின் அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கு என்னுடைய அப்பாதான் முதல் ஹீரோ.
விக்ரம் பிரபுவும் நீங்களும் இணைந்து "அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்ததே....?
இல்லை. அது சரியாக வராது. இரண்டாம் பாகமோ, ரீமேக்கோ இரண்டுமே நன்றாக இருக்காது. அந்தப் படத்தை அப்படியேதான் பார்க்க வேண்டும்.
"டைட்டானிக்' படத்தை ரீமேக் செய்தால் பார்க்க முடியுமா? அது மாதிரிதான் அந்தப் படமும். "அக்னி நட்சத்திரம்' கிளாசிக் மூவி.
சரி... அப்பாவின் எந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசை....?
"உள்ளத்தை அள்ளித்தா'. அந்தப் படம் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா..? அப்பா கூட சேர்ந்து நடிக்க பயம். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அப்பாவிடம் கேட்டுப் பார்க்கலாம். எனக்காக எதையும் செய்வார்.
உங்க தம்பி காய்ன் கார்த்திக்கும் சினிமாவுக்கு வந்து விடுவார் போல...?
ஆமாம். தம்பி பெரிய திறமைசாலி. வித்தியாசமாக யோசிப்பார். தம்பிக்கு நான் நிறைய பணம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அதன் பின் அவன் வந்து நிறைய வித்தியாசமான சினிமாக்களில் நடிப்பான். சினிமாவுக்கு வந்தால் அவன் இடமே வேறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...